YOUAREHERE எம்மை பற்றி தலைவர்

University Grants Commission - Sri Lanka

  • English
  • Sinhala
  • Tamil-Sri Lanka

தவிசாளர்

 

Senior Prof. Sampath Amaratunge

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

தூர நோக்குமிக்க நிறுவனத்தை கட்டியெழுப்புபவர், புத்திசாதுரியமான பல்கலைக்கழக நிர்வாகி, கல்வியியலாளர், புகழ்பெற்ற வணிக ஆலோசகர் மற்றும் மனிதாபிமானம்மிக்க சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் 2020 ஜனவரி 03 முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி (சிறப்பு) பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதுமாணிப் பட்டத்தையும், சாகா தேசிய பல்கலைக்கழகத்தில் கிராமிய அபிவிருத்தி பொருளாதாரத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தையும், ஜப்பானின் ககோஷிமா தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ள பேராசிரியர் அமரதுங்க அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சுமார் 30 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ளார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான நிபுணரான பேராசிரியர் அமரதுங்க ஜப்பானின் கியூஷூ கிராமிய பொருளியல் சங்கத்தின் புகழ்மிக்க ஆராய்ச்சி சிறப்பு விருது (2002) உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளவராவார். அத்தோடு தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட 75 க்கும் மேற்பட்ட வெளியீடுகளின் உரித்துடைமையைக் கொண்டுள்ளவராவார்.

2021 ஆம் ஆண்டில், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள் ஜப்பான் பேரரசரால் வழங்கப்படும் “The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். Order of the Rising Sun என்பது 1875 இல் பேரரசர் மெய்ஜி அவர்களால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய ஆணையாகுமென்பதோடு அது ஜப்பானுடனான நட்புறவை மேம்படுத்துவதற்காக சிறந்த பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டவருக்கு வழங்கும் விருதாகும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை நியமிக்கப்பட்ட பேராசிரியர் அமரதுங்க அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார். தொழில்நுட்ப பீடம், பொறியியல் பீடம் மற்றும் அதனுடன் இணைந்த சுகாதார அறிவியல் பீடம் போன்ற மூன்று புதிய பீடங்களை ஆரம்பித்த பெருமை அவருக்குரியதாக இருப்பதுடன் அவர் நகர்ப்புற மற்றும் நீர்வாழ் உயிரியல் வளங்கள் பீடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்தார்.

அவர், ஆராய்ச்சிகளை தேசத்தின் உந்து சக்தியாகக் கருதினார். அதற்கிணங்க, அவர் 25 ஆராய்ச்சி மையங்களுக்கு வசதிகளை வழங்கும் வகையில் ஆராய்ச்சிக் குழுவை ஆராய்ச்சிக் கவுன்சிலாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஆராய்ச்சி முயற்சிகளை அறிமுகஞ் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டமையின் காரணமாக பேராசிரியர் அமரதுங்க அவர்களின் முதல் பதவிக்காலமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஆரம்ப நிதியுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஆராய்ச்சிக் கவுன்சில் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சி முயற்சிகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்புடைய கருத்திட்டங்களுக்காக முன்வைக்கப்பட்டன. மேலும், இந்தக் காலப் பகுதியினுள் தர மேம்பாடு, புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகம் மற்றும் மூலோபாய ரீதியிலான தொடர்புகள் ஆகிய துறைகளிலும் பாரிய வளர்ச்சியைக் காண முடியுமாகியது.

மேலும், பல்கலைக்கழகக் கல்விக்கும் தொழில் சந்தைக்கும் இடையிலான இடைவெளியை இனங்கண்டு கொண்ட சிரேஷ்ட பேராசிரியர் அமரதுங்க அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புத்தாக்கம், நவீனமயப்படுத்தல் மற்றும் வர்த்தக முயற்சிகள் கவுன்சிலை ஆரம்பித்தார். இதனூடாக புத்தாக்கம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாணவர்கள் மற்றும் ஆளணி அங்கத்தவர்களை ஊக்குவித்தார் தற்போது, பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 50 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் கவுன்சிலின் கீழ் செயற்படுகின்றன. மேலும், இந்த கவுன்சில் ஊடாக காப்புரிமை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக செயற்பாட்டின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் 15 இற்கும் மேற்பட்ட காப்புரிமை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தின் 60 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி BMICH இல் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் புத்தாக்க கண்காட்சியை ஆரம்பித்தார். இக்கண்காட்சி மூலம் திறமை, புத்தாக்கம் மற்றும் வர்த்தகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதுடன், இதன் மூலம் கைத்தொழில்துறை, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க முடியுமாகியது. இந்த கண்காட்சி தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

துணைவேந்தராக மாணவர்களுடன் நடவடிக்கை மேற்கொள்ளும்போது பேராசிரியர் அமரதுங்க அவர்கள் தனித்துவமான மற்றும் ஒப்பற்ற மாணவர் மைய அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். மக்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளின்போது அவரது மனிதாபிமான அணுகுமுறை காரணமாக கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணி அங்கத்தவர்கள் அவருக்கு ஒரே விதத்தில் அன்பு காட்டுகின்றனர். அவர் பல்கலைக்கழக சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றுள்ளதுடன் அநேகமானோருக்கு ஆலோசகராகவும் முன்மாதிரியாகவும் திகழ்கின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாக (2008-2014) பணியாற்றினார்.

அவருடைய பங்களிப்பு மற்றும் சாதனைகள் உள்நாட்டில் போன்றே சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் மலேசியாவின் தர்ம பௌத்த பல்கலைக்கழகத்தினால் அவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டதுடன் தேசத்திற்கும் பௌத்த மதத்திற்கும் அவர் ஆற்றிய சேவைகளுக்காக 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 'வித்யோதய தர்மசாஸ்திர விபூஷன' கௌரவ விருதைப் பெற்ற இலங்கையின் ஒரே துணைவேந்தரானார். பல்கலைக்கழக கல்வி, நிர்வாகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாக அவரது தூரநோக்கு, தொலைநோக்குடைய தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டி 2018 செப்டம்பர் மாதத்தில் CPM முகாமைத்துவத்திற்கான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பேராசிரியர் அமரதுங்க அவர்கள் பல்வேறு துறைகளில் நடைமுறைசார் அறிவாளியாவார். சகோதரத்துவ சங்கங்களை அமைத்தல், விரிவுரையாளர்களுக்கான ஆராய்ச்சி அளிப்புத் திட்டத்தை நிறுவுதல் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்ப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முறையொன்றை தயாரித்தல் போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைந்த காலப் பகுதியில் அவர் இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் (FUTA) தலைவராகவும் (2009 - 2012) சிறப்பான சேவையை ஆற்றினார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (2010) நியமிக்கப்பட்ட இளைய ஆணைக்குழு உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட பேராசிரியர் அமரதுங்க அவர்கள் பல முக்கியமான அரச ஆணைக்குழுக்களிலும் முக்கிய பதவிகளை வகித்தார். இது தவிர, அவர் கல்வி சார்ந்த பணிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படாமல் ஆனால் பல முன்னணி நிறுவனங்களின் முகாமைத்துவ சபைகளில் சுயாதீன பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர் கல்வி கற்கும் காலத்திலிருந்தே திறமையான விளையாட்டு வீரரான இவர், தனது பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும்போது சிறந்த வீரராக (கிரிக்கட்) மற்றும் வர்ண வீரனாகவும் தெரிவு செய்யப்பட்டதுடன், பின்னர் இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் தலைவராகவும் (2009-2010) நடவடிக்கை மேற்கொண்டார். பேராசிரியர் அமரதுங்க அவர்கள் தனது தொழில் வாழ்க்கையில் காண்பித்த நியாயம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் மற்றும் விளையாட்டுத் திறன் என்பவற்றுடன் தொடர்புடைய குணப் பண்புகள் சாரணமானவை அல்ல. அவர் துணைவேந்தராகப் பணியாற்றும் காலப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 2014 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் ஆகியமையும் ஒரு விசேடமான மற்றும் அரிதான நிகழ்வொன்றாகும்.

பேராசியர் அமரதுங்க அவர்கள் துணைவேந்தராக தனது முதலாவது பதவிக் காலத்தில், பல இலட்சியத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளதுடன், அவற்றின் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் அதிர்ஷ்டசாலியானார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளராக தனது தற்போதைய பதவிக் காலத்தினுள் இலங்கையின் ஒட்டுமொத்த உயர்கல்வி முறையின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் பங்களிப்பை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

 

Chairman's Events Gallery


தகைமைகளை அங்கீகரித்தல்


தகைமைகளை
அங்கீகரித்தல்